இலங்கையில் பிரித்தானியாவையும் விட அதிகளவான படையினர் இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் 3 லட்சத்துக்கு 31ஆயிரம் படை வீரர்கள் சேவையில் உள்ளனர். எனினும் பிரித்தானியாவில் 90 ஆயிரம் படையினரே உள்ளனர். போருக்கு பின்னர் ஒரு நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய நல்லிணக்க விடயங்கள் இலங்கையில் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கம்
இதன் காரணமாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், முன்மொழியப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தில், மக்களின் நிவாரணங்களை காட்டிலும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில், இந்தளவு படையினர் தொடர்ந்தும் செயலில் இருப்பது இந்தியாவுக்கு, சீனாவுக்கு, அமெரிக்காவுக்கு அல்லது மாலைத்தீவுக்கு எதிராகவோ போர் செய்வதற்காக அல்ல.
மாறாக வடக்கு கிழக்கின் தமிழ் பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே படையினர் செயற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
போருக்கு பின்னர் பல நாடுகள் DDR என்ற பொறிமுறைகளை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுத்தி வருகின்றன. எனினும், இலங்கை இது தொடர்பில் இன்னும் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவில்லை.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்படாத நிலையில் தமிழ் கட்சிகளில் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதில் பயனில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.