புதுடெல்லி: தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த, ஐஏஎஸ் விதிமுறை மாற்றம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என ஒன்றிய அரசு கூறி உள்ளது. இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954ல் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திருத்தத்தின்படி, ஒன்றிய அரசு பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றும் போது, மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளும் கருத்து தெரிவிக்குமாறு கடந்த ஜனவரியில் ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார். அதற்கு பதிலளித்த ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, ‘மாநில அரசுகள் தெரிவித்த கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. மாநில அரசுகள் என்ன கருத்து தெரிவித்தன என்பதை வெளியிட முடியாது. இது தகவல் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் உள்ளது’ என கூறி உள்ளது.
