இரண்டே மாதத்தில் முடித்தோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ.74.24 கோடி செலவில் 29 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.156.28 கோடி மதிப்பீட்டிலான 727 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,658 பயனாளிகளுக்கு ரூ.117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிகமான இந்த கல்வி நிறுவனங்கள் முதன்முதலாக உருவானது நெல்லைச் சீமையில்தான். ‘தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு’ என்று அழைக்கப்படக்கூடிய பாளையங்கோட்டை இருக்கக்கூடிய நகரம் இது என்றார். கடந்த ஓராண்டு காலத்தில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு திமுக அரசு செய்திருக்கக்கூடிய நலத்திட்டங்கள் அதனால் மக்கள் அடைந்திருக்கக்கூடிய பயன்கள் பற்றி அப்போது முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார். மேலும், திருநெல்வேலி மாவட்டத்துக்கு தமிழக அரசு மேற்கொள்ளவுள்ள நலத்திட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், மாவட்டத்தின் தேவைகளுக்கான சில அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “சட்டமன்றத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைக்கும்போது. சொல்லிவைத்தது போல, அனைவருமே, என்ன பேசுவார்கள் என்றால், “என்னுடைய தொகுதி பின்தங்கிய தொகுதி, ஆகவே இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும்” என்று கேட்பார்கள். என்னைப் பொறுத்தவரையில், பின்தங்கிய தொகுதி என்று எதுவும் இருக்கவே கூடாது. அதனால்தான், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பத்து பிரச்சினைகளை எழுதி, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, அதனை நிறைவேற்றித் தரும் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற மகத்தான திட்டத்தை 234 தொகுதிக்கும் நான் தொடங்கி வைத்திருக்கிறேன். இது, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கிடையாது. நம்முடைய தமிழ்நாட்டில் தான் இது உருவாகியிருக்கிறது.” என்றார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்த நிகழ்வு பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், “அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரியில் சேருகிறபோது, அந்தக் கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டத்தை தொடங்கி வைக்கக்கூடிய நிகழ்ச்சிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வந்திருந்தார். அதில் கலந்து கொண்டு பேசுகிறபோது சொன்னார், ‘இது அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரித் திட்டம்’ என்று பெருமையோடு சொன்னார். இப்படி, தமிழக அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களும் இந்தியாவுக்கே முன்மாதிரித் திட்டங்களாக அமைந்துள்ளன.” என்றார்.

கடந்த ஏப்ரல் மாதம், டெல்லி சென்ற நான் அங்கிருந்த மாதிரி பள்ளிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்று பார்வையிட்டேன். தமிழ்நாட்டில் இதே மாதிரி உருவாக்குவேன், அதனை நீங்கள் தொடங்கி வைக்க வர வேண்டும் என்று முதலமைச்சராக இருக்கக்கூடிய அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தேன். ஆறு மாதத்தில், அவரை இங்கு வரவழைத்து அதனைத் தொடங்கி வைக்கவும் நாங்கள் செய்துவிட்டோம். “இரண்டு ஆண்டு ஆகும் என்று நினைத்தேன். ஆறு மாதத்தில் ஆரம்பித்துவிட்டீர்களே!” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனம் திறந்து பாராட்டியதாகவும் அப்போது முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.