சென்னை: நீட் தேர்வு முடிவுகள், கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் சென்னை குரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.சுந்தரராஜன், முதல் முயற்சியிலேயே 720-க்கு 503 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி, ஜெயலட்சுமி தம்பதியின் 2-வது மகனான சுந்தரராஜன், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 576 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து எவ்வித பயிற்சி மையத்தின் உதவியுமின்றி சுயமாக படித்துநீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து மாணவர் சுந்தரராஜன் கூறும்போது, “நீட் தேர்வில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. சிறுவயது முதலே மருத்துவராகும் கனவு இருந்தது. பாடங்களை திரும்ப, திரும்ப புரிந்து படிப்பதன் மூலமாகவே அதிக மதிப்பெண் பெற முடியும்” என்றார்.