‘உங்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும்’ – பகாசூரன் இயக்குநர் மோகன் ஜி

‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய படம் திரௌபதி. காதல் என்ற பெயரில் நடக்கும் போலி திருமணத்தை விமர்சிக்கிறோம் என்ற தொனியில் வெளியான அப்படம் அப்பட்டமாக சாதிய மனநிலையோடு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் ரீதியிலேயே படமாக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டும், விமர்சனமும் எழுந்தன. திரௌபதி படத்துக்கு பிறகு ருத்ரதாண்டவம் படத்தை இயக்கினார் மோகன் ஜி.

அந்தப் படமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி விசிக தலைவர் திருமாவளவனை நேரடியாகவே விமர்சனம் செய்வதுபோல் காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் படமும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.

அதுமட்டுமின்றி மோகன் ஜி இதுபோன்ற படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று ஒரு தரப்பினரும், எதற்காக நிறுத்த வேண்டும் அனைவருக்கும் இங்கு படைப்பு சுதந்திரம் உண்டென்று மறு தரப்பினரும் பேசினர். இதற்கிடையே மோகன் ஜியின் படங்கள் மட்டுமின்றி, தனியார் சேனலின் அலுவலகத்துக்கு சென்று மிரட்டியது, ஏதேனும் கேள்வி கேட்டால் பேட்டியை பாதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்புவது என்று அவரது செயல்பாடுகளும் விமர்சனத்தையும், ட்ரோல்கலையும் சந்தித்தன.

இந்தச் சூழலில் அவர் இயக்குநர் செல்வராகவனை வைத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் செல்வராகவனுடன் நட்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

 

இந்நிலையில் பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன் ஜி பகாசூரன் படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா என தொடங்கும் வரிகள் கொண்ட பாடல் விரைவில் வெளியாகும். மிக பெரிய ஒரு பரவசத்தை இந்த பாடலின் இசை உருவாக்கும். செல்வராகவன் சார் நடிப்பில், நடனத்தில் அசத்தியுள்ளார்” என குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.