தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவில் உதவி பேராசிரியர் சதீஷ்குமார், 2ம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குநருக்கு மாணவிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், முதல்கட்டமாக மருத்துவமனை குழந்தைகள் வார்டுக்கு சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கண்மணி கார்த்திகேயன், தண்டர்சீப், காந்தி ஆகியோர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சென்னை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது. அறிக்கையின்படி, டாக்டர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், குழுவினர் விசாரித்து கடந்த 8ம் தேதி அறிக்கை வழங்கினர். மாணவி கொடுத்த புகாரும், விசாரணை அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவலும் ஒரே மாதிரி இருந்ததால், நடந்தது உண்மை என தெரிய வந்தது. இதன்பேரில், உதவி பேராசிரியர் டாக்டர் சதீஷ்குமார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று தவறான காரியங்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.