காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை கருத்து… திமுக ஆ.ராசாவின் எம்பி பதவிக்கு சிக்கல்?

பாஜகவின் ஹெச்.ராஜாவை போன்றே சர்ச்சை பேச்சுக்களுக்கு பெயர் போனவர் திமுக எம்பி ஆ.ராசா. திமுகவின் சார்பில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்துக்கள் குறித்து அவர் பேசியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘பெரியாரை ஏற்றுக்கொண்ட திமுக, தனித் தமிழ்நாடு என்ற அவரது இந்த கோரிக்கையில் இருந்து விலகி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்…’ என்று வழக்கமான தமது பாணி பேசிக் கொண்டிகுந்த ஆ.ராசா, தொடர்ந்து இந்துக்களின் மனம் புண்படும்படியாக தரக்குறைவாக உதிர்த்த சில வார்த்தைகள் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

40 வினாடிகள் கொண்ட ஆ.ராசாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அத்துடன், ‘திமுக எம்.பி ஆ.ராசா , மற்றவர்களை திருப்திப்படுவதற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக பேசி கொண்டிருக்கிறார். இத்தகைய தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று அந்த பதிவில் அண்ணாமலை வேதனை தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் இந்த வீடியோ கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வர, இந்துக்கள் குறித்த ஆ.ராசாவி்ன் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் போன்றவர்கள் ஆதரவாகவும், நடிகை கஸ்தூரி உள்ளி்ட்டோர் எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆ.ராசா சார்ந்த மதம் குறித்து திமுகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரசை சேர்ந்த முக்கிய பிரமுகர் கூறியுள்ள கருத்து, கூட்டணிக்குள் குண்டு வைப்பதாக இருப்பதுடன், ஆ.ராசாவின் எம்பி பதவிக்கே சிக்கலை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் ஆ.ராசா பேசியதை விமர்சித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்துக்களை இழிவாகப் பேசும் மாற்று மதத்தை சேர்ந்த ஆ.ராசா போன்றோரின், பிரிவினைவாத பேச்சை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ்.அழகிரி, தேசிய அளவில் காங்கிரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். மதத்தின் பெயரால் காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கும் விதத்தில் பேசியுள்ள ஆ.ராசாவை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வேண்டுகிறேன்’ என்று டவிட்டரில் பதிவிட்டுள்ளார் அமெரிக்கை நாராயணன்.

அவரது இந்த பதிவில் ஆ.ராசாவை அவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளது, அவரது எம்பி பதவிக்கு வேட்டு வைக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக அரசியல் அரங்கில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்துக்கள் அல்லாத பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், எம்பி, எம்எல்ஏ தேர்தல்களில் தனித் தொகுதிகளில் போட்டியிட முடியாது.

ஆனால், கடந்த 2019 எம்பி தேர்தலில், நீலகிரி தனித் தொகுதியில் ஆ.ராசா வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவரை வேற்று மதத்தவர் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் கூறியுள்ளதன் விளைவாக, ஆ.ராசாவின் எம்பி பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.