வானூர்: கைவினை பொருட்கள் விற்கும் கடையில் இருந்து 7 சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா ஆரோவில் அருகே பொம்மையார்பாளையம் கிராமத்தில், மெட்டல் கிராப்ட் என்ற கடையில் தொன்மையான சிலைகள் பதுக்கி வைத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் தனிப்படையினர் அங்கு சோதனை நடத்தினர்.
அங்குஅர்த்தநாரீஸ்வரர், சிவகாமி அம்மன், இடது கை உடைந்த நிலையில் மற்றொரு அர்த்தநாரீஸ்வரர், கிருஷ்ணர், புத்தர், மயில்வாகனம், மேலும் ஒரு அர்த்தநாரீஸ்வரர் என 7 சிலைகளை பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் கோயில்களில் வழிபாட்டில் இருந்த சிலைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடை உரிமையாளர் ராமச்சந்திரனிடம் விசாரித்ததில் சிலைக்கான எந்த ஆவணங்களும் இல்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிலைகளை போலீசார் கும்பகோணம் எடுத்து சென்றனர்.