தொடர் திருட்டு; நகைகளுடன் 4 பேர் கைது
அவிநாசி : அவிநாசி பகுதியில் கடந்த இரு மாத காலத்தில் வீட்டு கதவை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவின் பேரில், அவிநாசி டி.எஸ்.பி., பவுல்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உட்பட தனிப்படை போலீசார் விசாரித்தனர்.இதுதொடர்பாக கடந்த 13ம் தேதி மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த மகேந்திரன், பழங்காநத்தம், தண்டக்காரன் பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ், காளவாசல் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜ கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் 350 கிராம் தங்கம் மற்றும் இரண்டு டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ராஜசேகரன், 29 என்பவரை கோவை மாவட்டம் வெள்ளலுாரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.ராஜசேகரிடமிருந்து 55 பவுன் நகை, இரண்டு டூவீலர் மற்றும் வெவ்வேறு மாவட்டங்களில் திருடப்பட்ட இரண்டு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.ராஜசேகரன் மீது திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருச்சி, விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில்பல்வேறு கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது.
திருமணமான 9 மாதங்களில்வாலிபர் வெட்டிக்கொலை
அலங்காநல்லுார்: கள்ளிவேலிபட்டி ஊராட்சி கம்மாபட்டி கர்ணன் மகன் பொன்னுமணி 25. நகரி தனியார் மில் ஊழியர். திருமணமாகி 9 மாதமாகிறது. செப்.,16 மதியம் டூவீலரில் வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.நேற்று காலை கிராமம் அருகே தலை, கழுத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.
சில மாதங்களுக்கு முன் கிராம கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பொன்னுமணியை அதேபகுதி சூர்யா மற்றும் நண்பர்கள் கொலை செய்ததாக தந்தை கர்ணன் புகார் செய்தார். சம்பவ இடத்தை எஸ்.பி., சிவபிரசாத் ஆய்வு செய்தார். கொலையாளிகளை டி.எஸ்.பி., பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணை கட்டிப்போட்டு200 கிராம் நகை கொள்ளை
மைசூரு : நஞ்சன்கூடின், ராமசாமி லே — அவுட்டில், பெண் ஒருவரை கை, கால்களை கட்டிப்போட்ட மர்ம கும்பல், பாலியல் பலாத்காரம் செய்வதாக மிரட்டி, 200 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.மைசூரு, நஞ்சன்கூடின், ராமசாமி லே — அவுட், முதல் பிளாக்கில் வசிக்கும் ஷம்புசாமி, உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இவரது மனைவி தாட்சாயிணி. நேற்று காலை கணவர், பணிக்கு சென்ற பின், 8:30 மணியளவில், மனைவி தனியாக வீட்டில் இருந்தார். அப்போது கதவு தட்டப்பட்டது. வெளியே இருந்த மர்மநபர்கள், ‘பார்சல் வந்துள்ளது’ என, ஏதோ பார்சலை காண்பித்தனர். இதை நம்பி தாட்சாயிணி கதவை திறந்தார்.அவரை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அவரது கை, கால்களை கட்டிப்போட்டு, வாயில் ‘பிளாஸ்டர்’ ஒட்டினர். கூச்சலிட்டால் பலாத்காரம் செய்வதாக மிரட்டினர். அவர் அணிந்திருந்த தங்கத்தாலி செயின், வளையல், மோதிரம், பீரோவிலிருந்த நகைகள் உட்பட, 200 கிராம் எடையுள்ள தங்க நகைகளை, கொள்ளையடித்து தப்பியோடினர்.தகவலறிந்து அங்கு வந்த, நஞ்சன்கூடு ஊரக போலீசார், ஆய்வு செய்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவத்தால், அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
காதல் திருமணம் செய்தபெண் மர்ம சாவு
![]() |
வானுார் : காதல் திருமணம் செய்த 2 ஆண்டில் பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, ஒதியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி, 48; இவரது மகள் ஜோதி என்கிற ஜீவஜோதி, 20; இவர், கடந்த 2020ம் ஆண்டு புதுச்சேரி, குருமாம்பேட், அமைதி நகரைச் சேர்ந்த ஆப்ரகான், 24; என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின், தனது தாய்க்கும், ஜோதிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால், ஆப்ரகான் மனைவியுடன், விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை, ஓம்சக்தி நகரில் வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி, ஜோதி வலிப்பு ஏற்பட்டு, புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு சென்று விசாரித்த போது, ஜோதி துாக்கிட்டுக் கொண்டதாகவும் அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஆப்ரகான் தரப்பில் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே அங்கு சிகிச்சையில் இருந்த ஜோதி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரோவில் போலீசில் காந்தி அளித்த புகாரின் பேரில், போலீசார் சந்தேக மரண வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகின்றார்.
பைக்குகள் மீது வேன் மோதி தம்பதி பலி
![]() |
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பைக்குகள் மீது மினி லோடு வேன் மோதிய விபத்தில், கணவன், மனைவி இறந்தனர்.சேலம் மாவட்டம், எ.வாழப்பாடியைச் சேர்ந்தவர் சின்னசாமி, 65; மனைவி குமாரி, 60;, மகள் பல்லவி, 27; ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் 12:30 மணியளவில் டி.வி.எஸ்., ஜைவ் பைக்கில் வீரபயங்கரத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்குச் சென்றனர்.மற்றொரு பைக்கில் சின்னசாமி மகன் வினோத், 32; மருமகள் பவானி, 27; மற்றும் பேரன் கமலேஷ், 5; ஆகியோர் ஹீரோ கிளாமர் பைக்கில் சென்றனர்.
சின்னசேலம் அடுத்த குரால் அருகே, எதிர்திசையில் பெரம்பலுார் மாவட்டம், பில்லங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன், 35; என்பவர் ஓட்டி வந்த மினி லோடு வேன், சின்னசாமி மற்றும் வினோத் ஓட்டிச் சென்ற பைக்குகள் மீது மோதியது.இதில் பைக்கில் சென்ற 6 பேரும், வேன் டிரைவரும் படுகாயமடைந்தனர்.காயமடைந்த 7 பேரும், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், சின்னசாமி, குமாரி இறந்தனர். கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ரூ.3.15 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
![]() |
கூடலுார் : கேரளாவில் இருந்து குமுளி வழியாக தமிழக பகுதிக்கு கடத்தி வந்த ரூ.3.15 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து தேனியை சேர்ந்த சவுந்திரராஜனை கைது செய்தனர்.கூடலூர் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன், தனிப்பிரிவு போலீசார் குமுளி மலைப்பாதையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கேரளாவிலிருந்து தமிழகப் பகுதிக்கு வந்த டூவீலரில் சோதனை செய்தபோது கூரியர் தபால் அதிகம் இருந்தது. டூவீலரில் வந்தவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறியதால் தபாலை பிரித்து சோதனை செய்தனர். அதில் லாட்டரி சீட்டுகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 3.15 லட்சம். டூவீலரில் வந்த தேனி அல்லிநகரம் சவுந்திரராஜனை 38, கைது செய்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.
மாணவருக்கு கத்திக்குத்து வாலிபர்கள் கைது
கோவை : ஒண்டிபுதுார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவர், தன் நண்பர்களுடன் வரதராஜபுரம் உப்பிலிபாளையம் மாநகராட்சி பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மூவர் அந்த மாணவரை வழிமறித்தனர்.’எங்கள் பகுதியில் உங்களுக்கு என்ன வேலை’ என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.வாக்குவாதம் செய்த வாலிபர்களில் ஒருவர், திடீரென பள்ளி மாணவரை கத்தியால் குத்தினார்.
படுகாயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லுார் எஸ்.ஐ., கார்த்திகேய பாண்டியன் வழக்கு பதிந்தார். பள்ளி மாணவரை கத்தியால் குத்திய உப்பிலிபாளையம் காந்தி நகரை சேர்ந்த கவுதம், 20, சி.எம்.சி., காலனி விக்னேஷ், 23, சுனில் குமார், 19, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும், மாஜிஸ்திரேட் உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர். எதிர் தரப்பில் விக்னேஷ் கொடுத்த புகார்படி பள்ளி மாணவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லுாரி மாணவியிடம் போலீஸ் எனக் கூறி நகை பறிப்பு
பூந்தமல்லி : பூந்தமல்லியில், போலீஸ் எனக் கூறி, மருத்துவ கல்லுாரி மாணவியிடம் நான்கு சவரன் செயின் பறித்துச் சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், முல்லை நகரைச் சேர்ந்த, 23 வயது பெண், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, பயிற்சி பெற்று வருகிறார்.நேற்று காலை, உறவினர் மகன் ஜிஜோ, 21, என்பவருடன், வண்டலுார்- – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், நசரத்பேட்டை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தான் போலீஸ் எனக் கூறி, அங்கு நின்று பேசக் கூடாது எனக் கூறியுள்ளார். மேலும், நகைகளை கழற்றி வைக்குமாறும், இல்லையெனில் உதவி ஆய்வாளர் வந்தால் பறித்துக் கொள்வார் எனவும் கூறியுள்ளார்.இதை நம்பி அந்த பெண், தான் அணிந்திருந்த வளையல், கம்மல், செயின் என, நான்கு சவரன் நகைகளை கழற்றி, கையில் வைத்திருந்தார்.அப்போது அந்த மர்ம நபர், நகைகளை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பினார்.இது குறித்த புகாரின்படி, மர்ம நபர்களை நசரத்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்