ஆளுநர் அடித்த அந்தர் பல்டி… ஆளுங்கட்சி செம அப்செட்!

பாஜக ஆட்சி புரியாத மாநிலங்களில் ஆபரேஷன் திட்டத்தை அரங்கேற்றி, ஆட்சியை கவிழ்க்கும் வித்தையை காட்டி வருகிறது பாஜக. சில மாதங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி, உத்தவ் தாக்கரேவை முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்கி, அந்த இடத்தில் ஏக்நாத் ஷிண்டேவை அமர்த்தி அழகுப் பார்த்தது பாஜக.

அதே பாணியில் பீகாரிலும் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சிக்கு முடிவுகட்ட முயற்சித்தது தாமரைக் கட்சி. சுதாரித்துக் கொண்ட நிதிஷ் குமார், என்னிடமே உங்க வேலையை காட்டுறீங்களா என்பது போல, பாஜக கூட்டணியில் இருந்து வெளிவந்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவில் மீண்டும் ஒரே நாளில் முதல்வரானார்.

பிகாரில் ஆபரேஷன் லோட்டஸ் போனால் என்ன? இருக்கவே இருக்கு டெல்லி… அங்கு நம் வித்தையை காட்டலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் பக்கம் தன் பார்வையை பாஜக திருப்ப, உடனே சபையை கூட்டி நம்பிக்கை வாக்கு கோரிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ தோல்வி அடைந்துவிட்டதாக கூறினார்.

இதனால் செம கடுப்பான பாஜக. பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பேரம் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜகவின் ஆபரேஷனை முறியடிக்கும் டெல்லி பாணியில் பேரவையில் நாளை (செப்.22) ஆம் ஆத்மி தமது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார்.

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு அமைச்சரவை ஒப்புதலுடன் ஆளுநர் மூலம் வெளியாகி இருந்தது. ஆனால், சட்டபேரவையை கூட்டுவதற்கான தமது உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென திரும்ப பெற்றுள்ளார். சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான குறிப்பிட்ட விதிகள் இல்லாததால் உத்தரவு திரும்ப பெறப்படுவதாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். ஆளுநரின் இந்த அறிவிப்பால் ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.