நாட்டின் பல பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோகிக்கும் சதித்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐஸ் வகைப் போதைப்பொருள் தற்போது நாடு முழுவதும் பேரழிவு வடிவில் பரவி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்….
‘இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டி மாவட்டத்தில், கம்பளையில் முகநூலில் தொடர்பு கொண்ட குழுவொன்று ஏற்பாடு செய்திருந்த களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்து. அவ்விடத்தில் 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் மயங்கிக் கிடந்நதனர். அதைக் கூறுவதற்கே வருத்தமாக உள்ளது.
ஐஸ் வகையான போதைப் பொருள் எந்த அளவு பேரழிவு வாய்ந்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. முன்பு நாம் ஹெரோயின் பற்றி பேசினோம். ஆனால் இன்று நாம் வேறு வகையான போதைப் பொருளைப்; பற்றி பேசுகின்றோம், எந்த சந்தர்ப்பத்திலும்; இப் போதைப் பொருளை பயப்படுத்திப் பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று சிறுவர்களையும் பெற்றோரையும் கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு முறை முயற்சித்துப் பார்த்தால் அதிலிருந்து விடுபடுவது சிறமமானது. ஐஸ் என்ற போதைப்பொருள் மிகப் பெரிய அளவில் சமூகத்தில் வேரூன்றி விட்டது. நாம் ஒரு சமூகப் பேரழிவை வேகமாக நெருங்கி வருகிறோம் என்று நினைக்கிறேன். எமது சிறுவர்களிடமும், ஆசிரியர்களிடமும் ஒரு கோரிக்கை விடுகின்றேன். தமது பாடசாலை சிறுவர்களை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.என்றும் அவர் கூறினார்.