ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனம் உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்ற வழக்கில் 10 ஆண்டு கழித்து 2 லட்சத்து 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட் கடையில் ஓசூரை சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற நபர் கடந்த 2013இல் 278 ரூபாய்க்கு ஒரு உள்ளாடை வாங்கியுள்ளார். அந்த ஆடையின் விலையை பரிசோதித்த போது அதில் MRP.260 ரூபாய் மட்டுமே போடப்பட்டிருந்தது.
தன்னிடம் கூடுதலாக 18 ரூபாய் வசூல் செய்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். விலை மாற்றத்தில் ஊழியர்களால் தவறு நடந்து விட்டதாக கூறி 18 ரூபாயை அவருக்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால், இதை ஏற்க மறுத்த சிவப்பிரகாசம் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடாக தமிழ்நாடு நுகர்வோர் நல நீதி வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், இதில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 5000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.