பெண்களின் உடல்களை துண்டுகளாக்கி சமைத்து சாப்பிட்டக் கொடூரம்! – கேரள நரபலி விவகாரத்தில் பகீர் தகவல்

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில் பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவர் மனைவி லைலா, இவர்களுக்கு நரபலி ஐடியா கொடுத்த முகமது ஷாஃபி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் எர்ணாகுளத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வரும் 26-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டாலும் அவர்களை காவலில் எடுத்து விரிவான விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே நரபலி விஷயத்தில் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருக்கின்றன.

கைதுசெய்யப்பட்ட லைலா, பகவல் சிங்

எர்ணாகுளத்தைச் சேர்ந்த முகமது ஷாஃபி ஃபேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி அக்கவுன்ட் தொடங்கி அதன்மூலம் பலருக்கு வலை விரித்துள்ளார். அதில் சிக்கியவர்தான் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங். அந்த ஃபேஸ்புக்கில் சாட் செய்து ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் நிலைக்கவும் நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் முகமது ஷாஃபி. இதை நம்பிய வைத்தியர் பகவல் சிங் நரபலி பூஜைக்குத் தயாரானார். முகமது ஷாஃபி பத்தனம்திட்டா சென்று பகவல் சிங்கைச் சந்தித்து நரபலிக்கான பெண்களை ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி எர்ணாகுளம் காலடியில் லாட்டரி வியாபாரம் செய்துவந்த ரோஸ்லி என்ற பெண்ணையும், கடந்த மாதம் 26-ம் தேதி எர்ணாகுளத்தில் லாட்டரி விற்று வந்த தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணையும் நரபலி கொடுத்திருக்கின்றனர்.

மீட்கபட்ட உடல் பாகங்கள்

தருமபுரியைச் சேர்ந்த பத்மாவை நரபலி கொடுத்தப் பிறகு சில பூஜைகள் செய்துள்ளார் முகமது ஷாஃபி. பின்னர் உடலை 56 துண்டுகளாக வெட்டியுள்ளனர். கழுத்தை கத்தியால் அறுத்தவர்கள், கைகளையும், கால்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சிறு சிறு துண்டுகளாக வெட்டியுள்ளனர். மேலும், “அந்த மாமிசத்தில் சிறிது சாப்பிட வேண்டும்” என முகமது ஷாஃபி கூறியுள்ளார். பகவல் சிங்கும், லைலாவும் முதலில் மறுத்துள்ளனர். பின்னர் உடலின் சிறிது பாகத்தை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, மீதமுள்ள உடல் துண்டுகளை வீட்டின் வெளிப்புறத்தில் உப்பு, காசுகள் போன்றவை போட்டு புதைத்துள்ளனர். இவர்கள் மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.