மதுரை: துபாயிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் கடத்தியதாக ரூ.56.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் விமான பயணிகளிடம் சுங்க இலாக்கா அதிகாரிகள் சட்டவிரோதமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என, பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். இதன்படி, இன்று காலை துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் அந்த விமானத்தில் பயணித்த மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பா என்பவரின் டிராலி பேக்கை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின் விசிறியை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, 4 சிறிய காலி குழாய்களில் தங்கக் கட்டிகளை நிரப்பி கடத்தி வந்தது தெரிந்தது.
சுமார் ஒரு கிலோ 97 கிராம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 56 லட்சத்து 40 ஆயிரத்து 774 என, அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக அப்பயணியிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.