தென்காசி மாவட்டத்தில் மருமகள் உடல்நலம் குணமடைய வேண்டி மாமியார் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஐந்தாம்கட்டளை வடக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிமுத்து. இவரது மனைவி அன்னம்(88). இவர்களது மகன் கண்ணன்(55). இவர் தனது மாமா மகளான கவிதாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால், அன்னம் கவிதா மீது மிகுந்த பாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களாக கவிதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அன்னம் மனவேதனையில் இருந்துள்ளார்.
மேலும் அன்னத்தின் கனவில், தான் இறந்தால்தான் மருமகள் உடல்நலம் சரியாகும் என்பது போல் தோன்றியதால் அதனை தனது மகனிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்நிலையில் அன்னம் தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு உள்ளார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அன்னம் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அன்னத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.