மதுரை: பிரச்னைக்குரிய வீடியோ, பதிவுகளை நீக்க முடியாதென சமூக வலைத்தளங்கள் சார்பில் ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ல் தனியார் யூடியூப் சேனலில் பேட்டி அளித்திருந்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு எதிராக, ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதித்துறை) தரப்பில் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த செப். 15ல் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது யூடியூப், டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, ‘‘சவுக்கு சங்கரின் டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டது. லட்சக்கணக்கான பதிவுகள் பதிவாகும்போது அவற்றை கண்காணிக்க முடியாது. பிரச்னைக்குரிய வீடியோ மற்றும் கருத்துக்களை நாங்களாகவே நீக்க முடியாது. குறிப்பிட்ட பதிவுகள் தொடர்பாக நீதிமன்றமோ, அரசோ விபரத்தை தந்தால் சம்பந்தப்பட்ட அந்த பதிவை நீக்கலாம்’’ என்றனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘பணிநீக்கம் செய்வது தொடர்பாக சங்கரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை. சமூக வலைத்தளங்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி செயல்படுகின்றன. இதனால் தனிமனித உரிமை பாதிக்கப்படுவதுடன், சட்டம் – ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம். சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட பதிவு மற்றும் வீடியோ வெளியிடுவோரின் ஆதார் அடையாளங்களை யூஆர்எல் பதிவோடு இணைத்திருக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.