குஜராத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் திட்டம்!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியுடனும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியுடனும் நிறைவடைகின்றன. பதவிக்காலம் முடிவடைவதற்கு அதிகபட்சம் 6 மாதகால அவகாசம் இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி.

அதன்படி, மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இமாச்சலப் பிரதேச தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் அட்டவணை பிறகு வெளியிடப்படும் என கூறினார். இதுதொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “இரண்டு மாநிலங்களுக்கு அடுத்தடுத்து தனித்தனியே தேர்தல் நடத்துவதாக இருந்தால், ஒரு மாநிலத்தின் தேர்தல் நடந்து முடிந்து 30 நாட்களுக்குப் பிறகே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி. ஒன்றின் முடிவு மற்றொன்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த விதி அமலில் உள்ளது. இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்கலம் முடிவடையும் தேதியில் இருந்து 40 நாட்கள் கழித்தே குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதால் இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் தனித்தனியே நடத்துவதில் விதிப்படி தவறில்லை.” என விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதியை அறிவிக்காதது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருவதற்கிடையே, குஜராத் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குஜராத்தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதிக்குள் ஒரே கட்டமாகவோ அல்லது இரண்டு கட்டமாகவோ நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இமாச்சலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகளுடன் குஜராத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் தொடர்ந்து 24 ஆண்டுக்காலமாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் அம்மாநிலத்தில் வலுவிழந்துள்ள நிலையில், பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, அடுத்ததாக குஜராத் மீது தனது கவனத்தை செலுத்தியுள்ளது. பல்வேறு இலவச அறிவிப்புகள் உள்ளிட்ட உத்திகளுடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது ஆம் ஆத்மி கட்சி, எதிர்வரவுள்ள தேர்தலில் பாஜகவுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.