காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா, ராகுல் வாக்களிப்பு!

நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை யார் அலங்கரிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாக காந்தி நீடித்து வந்த நிலையில் வயது முதிர்ச்சி காரணமாக ராகுல் காந்தியை தலைவராக தேர்ந்தெடுத்தனர். 2019 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தியும் தலைவர் பதவியை அவர் மீண்டும் ஏற்க முன்வரவில்லை. இதனால் சோனியா காந்தி மீண்டும் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

மக்களவைத் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் நிரந்தர தலைவரை தேர்ந்தெடுத்து கட்சிக்கு புதிய இரத்தம் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.

24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்களித்தனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி தேர்தலை முன்னிட்டு இன்று ஓய்வு மேற்கொண்டுள்ளார். சிறப்பு அனுமதியுடன் அவரது வாகனத்திலேயே வாக்களித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப. சிதம்பரம் தனது வாக்கினை செலுத்தினார். தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 211 கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.