
அஜித்துக்கு டூப்பை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்திய வினோத்
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாகவும் அதனை எடிட் செய்து பார்த்த இயக்குனர் வினோத் ஒரு சில காட்சிகளை மட்டும் பேட்ச் ஒர்க் செய்வதற்காக மீண்டும் எடுப்பதற்கு திட்டமிட்டாராம்.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை, அண்ணாசாலையில் இதன் பேட்ச் வொர்க் காட்சிகளை படமாக்கியுள்ளார் வினோத். அப்போது அங்கு இருந்த ஒரு தீயணைப்பு வண்டியில் இருந்து அஜித் மாஸ்க் அணிந்தபடி குதித்து தனது சக வீரர்களுடன் நடந்து செல்வது போன்று காட்சியை படமாக்கியுள்ளார். இந்த தகவல் அறிந்து அஜித்தை பார்ப்பதற்காக அங்கே கூட்டம் கூடியது. ஆனால் கடைசி வரை அஜித் தனது மாஸ்க்கை கழட்டவில்லை.
இந்தநிலையில் மறுநாள் திங்கள்கிழமை அஜித் வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது. அப்படியானால் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நபர் அஜித் இல்லை என்பதும் ரசிகர்களுக்கு தெரியவந்து. அது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. பேட்ச் வொர்க் என்பதால் அஜித்திற்கு பதிலாக அவரைப்போன்ற தோற்றம் கொண்ட டூப்பை வைத்து தான் இயக்குனர் வினோத் படமாக்கியுள்ளார் என்பதும் இதன்மூலம் உறுதியாகி உள்ளது.