புதுடில்லி போலீஸ், ‘கஸ்டடி’யில் உயிரிழந்த சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கு விசாரணையை கேரள நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், ‘மொபைல் போன்’ விற்பனை நிலையம் நடத்தி வந்த, தந்தை – மகனான, ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோர், 2020 ஜூன் 19ல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், 2020 ஜூன் 22ம் தேதி நள்ளிரவு இருவரும் சந்தேகத்துக்கு இடமான வகையில் உயிரிழந்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்கியதை தொடர்ந்து அவர்கள் உயிரிழந்ததாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது.
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த ஒன்பது போலீஸ்காரர்கள் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட எஸ்.ஐ., ரகு கணேஷ் என்பவர், வழக்கு விசாரணையை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ‘சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ஏற்கனவே 44 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
‘எனவே, வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது’ என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement