அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் பதிவு 123 அலுவலர்களுக்கு மெமோ: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: அங்கீகரிக்கப்படாத 30 ஆயிரம் மனைப்பிரிவுகளை பதிவு செய்த விவகாரத்தில் பதிவுத்துறை அலுவலர்கள் 123 பேருக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வீரபாண்டி பகுதியில் அரசின் அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை மோசடியாக விற்பனை செய்வதுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. உள்ளாட்சி பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது.

இதை பின்பற்றாமல் தேனி சார்பதிவாளர் உஷாராணி முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கிறார். இவரது அலுவலகத்தில் முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதேபோல் சிவகாசியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு கூடுதல் பிளீடர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆஜராகி, ‘‘பத்திரப்பதிவு திருத்த சட்டம் 22 ஏ அமலான பிறகு 2017 முதல் 31,625 அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைப்பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 123 பதிவுத்துறை அலுவலர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என மெமோ வழங்கப்பட்டுள்ளது. 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 6 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 20 பேரின் பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற மனை பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு உள்ளது. விதிமீறல் பதிவுகளை ஆய்வு செய்வது தொடர்பான குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது. விதிமீறல் மனைப்பிரிவுகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க கூடாது.

கட்டிட அனுமதி வழங்கக் கூடாது என ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அரசின் துரித நடவடிக்கையால் மாதத்திற்கு 200க்கும் குறைவான பதிவுகளே நடக்கிறது’’ என்றனர். இதையடுத்து நீதிபதிகள், மெமோ வழங்கப்பட்டதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.