மதுரை: நாக்கை வெட்டுவதாக பேசிய வழக்கில் பாஜ மாவட்ட தலைவருக்கு முன் ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் கிளை, இனிமேல் தவறாக பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட பாஜ சார்பில் தலைவர் மகா.சுசீந்திரன், கடந்த 7ம் தேதி பேசும்போது, ‘இந்து மதத்தையும், கடவுள்களையும் அசிங்கமாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது. அதனை துண்டு துண்டாக வெட்டி வீசுவோம்’ என கூறினார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை எழுப்பியது.
இதுதொடர்பாக சிலைமான் போலீசார், பொது இடத்தில் அவமரியாதையாக பேசியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியது தொண்டர்களை வன்முறைக்கு தூண்டியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மகா.சுசீந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, ‘‘இனிமேல் இதுபோல் தவறாக பேசமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும் பிரமாண பத்திரத்தை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சிலைமான் போலீசில் தினசரி காலை ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்துள்ளார்.