கேதார்நாத்தில் மலை மீது ஹெலிகாப்டர் மோதல் சென்னையை சேர்ந்த 3 பக்தர்கள் உட்பட 7 பேர் பரிதாப பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

ருத்ரபிரயாக்: உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத்தில் மலை மீது மோதி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விழுந்ததில் தமிழகத்தை சேர்ந்த 3 பக்தர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆரியன் ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு குப்தகாசி நோக்கி நேற்று காலை 11.45 மணிக்கு புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கருட் சட்டி பகுதியில் தேவ் தர்ஷிணி என்ற இடத்தை கடக்கும் போது, மோசமான வானிலையால் மலை மீது மோதி கீழே விழுந்து நொறுங்கி எரிந்தது. இதில், விமானி உள்பட 7 பேர் பலியாகினர்.

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இது குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்  இதையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களில் சுஜாதா (56), பிரேம் குமார் (60), கலா (60) ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. மீதி 2 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து அறிந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர்.

விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, `கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு துயரமடைந்தேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்க வேண்டுகிறேன்,’ என்று டிவிட்டரில் கூறியுள்ளார்.

* விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலா ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன், சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்ற போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* குதிரை சவாரியால் உயிர் தப்பிய கணவன்
பலியான பிரேம்குமார், அவரது மனைவி சுஜாதா சென்னை திருமங்கலம் சாந்தம் காலனியை சேர்ந்தவர்கள். இவர்களின் உறவினர் கலா, சென்னை மயிலாப்பூர் பாலகிருஷ்ணன் சாலையை சேர்ந்தவர். கலாவின் கணவர் ரமேஷ் மட்டும் அவர்களுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்யாமல் குதிரையில் சவாரி  சென்றதால் உயிர் தப்பினார். இறந்து போன பிரேம் குமார், சுஜாதா தம்பதிக்கு பிரசாந்த் என்ற மகனும், காவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரசாந்த் சிங்கப்பூரிலும், காவ்யா லண்டனிலும் வசித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.