ஆறுமுகசாமி ஆணையம்: சசிகலாவை சிக்க வைக்க சதியா? உண்மையின் தொகுப்பா?

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அறிக்கைகள் தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளன.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கை, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை இவையிரண்டும் நீண்ட எதிர்பார்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஆணையத்துக்கு ஆதரவான கருத்துக்களும் எதிரான கருத்துக்களும் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

கட்சியினர் மத்தியில் இல்லாமல் பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடையேகூட ஆணையம் குறித்த விமர்சனம் வெவ்வேறு விதமாக உள்ளது.

ஆணையத்தின் அறிக்கையில் பலர் மீது விசாரணை நடத்தலாம் என பரிந்துரை செய்திருந்தாலும் சசிகலாவை குறிவைத்து, அவரை சிக்க வைப்பதற்கான முயற்சியாக பல்வேறு யூகங்களை எழுப்பியிருப்பதாக ஒரு சாராரும், நீண்ட காலம் எடுத்துக் கொண்டாலும் உண்மையை வெளிக்கொண்டிருப்பதாக ஒரு சாராரும் கூறி வருகின்றனர்.

“கண் துடைப்புக்காக அதிமுக ஆட்சியாளர்கள் அமைத்த விசாரணை ஆணையம் அவர்களுக்கே எதிராக திரும்பியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் நேர்மையாக செயல்பட்டதாலேயே அவருக்கு அதிமுக ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவேதான் ஆறு மாதத்தில் முடிய வேண்டிய விசாரணை, ஐந்து ஆண்டுகளாக நீடித்துவிட்டது. ஜெயலலிதாவை சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகளை நேர்மையாக ஆறுமுகசாமி ஆணையம் கோடிட்டு காட்டியுள்ளது” என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

மற்றொரு சாராரோ, “ஆறுமுகசாமி ஆணையம் லீகல் அத்தாரிட்டி எனப்படும் சட்ட அங்கீகாரம் அற்றது. விசாரணை அறிக்கை என்பது தனக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் சாட்சியங்களின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும். ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் யூகங்களின் அடிப்படையிலேயே பல்வேறு விஷயங்களை சொல்கிறது. ஆறுமுகசாமி பயன்படுத்தி இருக்கும் குறட்பா ஆணையத்தின் அறிக்கையின் முடிவை எழுதிவிட்டு தொடக்கத்தை அதன் பிறகு எழுதினாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. நபர்களைப் பற்றி குறிப்பிடும் போது அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் வாக்கியங்கள் உள்நோக்கம் உடையவையாக தெரிகின்றன. அப்பட்டமான அரசியல் கலந்து எழுதப்பட்டுள்ளது இந்த அறிக்கை” என்கிறார்கள்.

ஜெயலலிதா மரணம் சர்ச்சையானது போல், அதை விசாரித்த ஆணையத்தின் அறிக்கையும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.