இந்த யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை: டிஜிபிக்கு உத்தரவு!

நீதிபதிகள், அரசியலமைப்பு பிரநிதிகள் மீது எந்த ஒரு அடிப்படை ஆதாரம் இல்லாமல் இழிவான கருத்துகள், நேர்காணல்களை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் யூடியூப் சேனல்களில் நேர்காணல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், வழக்கில் தமிழக டிஜிபி-யை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்ததுடன், அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், இணையதள குற்றங்களை கண்காணிக்கவும் சிறப்பு பிரிவு அமைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி தரப்பில், எல்காட் எனப்படும் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் மூலம் 22 கோடியே 64 லட்ச ரூபாய் மதிப்பில் நவீன சைபர் கருவிகளை வாங்குவதற்கான முன்மொழிகளை அரசிடம் சமர்பித்துள்ளதாகவும், உபகரணங்களை வாங்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை ஏற்று வழக்கு விசாரணையை நவம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அரசியலமைப்பு பிரதிநிதிகள், நீதிபதிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு எதிராக அடிப்படை ஆதாரம் இல்லாமல் இழிவாகவும், அவதுறாகவும் கருத்துகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை உள்ளது என்றும், அதற்கு எதிர்மறையாக நேர்மையற்ற கருத்துகளை கூறுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி, மலிவான விளம்பரத்துக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும், இல்லையென்றால் காளான் போல் பரவிவிடுவார்கள் என எச்சரித்துள்ளார்.

சமூக அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவும், சமூக ஒழுக்கத்தையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்கவும் நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று சுட்டிகாட்டிய நீதிபதி, இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.