புதுடில்லி, பிரிட்டனைச் சேர்ந்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம், ‘ஸ்பெக்டர்’ எனும் மின்சார காரை காட்சிப்படுத்தியுள்ளது.
பாரம்பரிய ரோல்ஸ் ராய்ஸ் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், வெளிப்புறத்தில் ‘ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம்’ கார் போலவும், உட்புறத்தில் ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ கார் போலவும், இரண்டும் சேர்ந்த கலவையாக காட்சி அளிக்கிறது.
ஸ்பெக்டர் காரின் நீளம் 5 மீட்டராகவும், அகலம் 2 மீட்டராகவும் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸின் ‘பேண்டம், கோஸ்ட், கல்லினன்’ ஆகிய கார்கள் தயாரிக்கப்பட்ட ‘ஆர்க்கிடெக்சர் ஆப் லக்சுரி’ எனும் பிரத்யேக உருவாக்கு தளத்தில், இந்த கார் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கார் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதன் விபரக் குறிப்புகள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
ஆனாலும், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஆரம்பக் கட்ட சோதனை தரவுகளின் படி, ஒரு சார்ஜில் 520 கிலோ மீட்டர் செல்லும் என்று சொல்லப்படுகிறது. 3 டன் எடை கொண்ட இந்த ஸ்பெக்டர் கார், 100 கி.மீ., வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிப் பிடிக்கிறது என்பது அசாதாரணமானது.
வரும் 2023ம் நிதியாண்டின் இறுதியில் வெளியாக இருக்கும் இந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மின்சார காரின் விலை, 7 கோடி ரூபாயை தொடும் என்றும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement