திருச்செந்தூர் அருகே கடற்கரையோரத்தில் 200மீ நீளத்திற்கு பழங்கால சுவர் போன்ற அமைப்பு: கொற்கை துறைமுகத்துடன் தொடர்பா?

ஏரல்: திருச்செந்தூர் அருகே கடற்கரையோரத்தில் 200 மீட்டர் நீளத்திற்கு பழங்கால சுவர் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது கொற்கை துறைமுகத்துடன் தொடர்பு உடையதா என கண்டறிய தொல்லியல் துறையினர் இந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சி மைய இயக்குநர் சுதாகர் சிவசுப்பிரமணியம், திருச்செந்தூரில் இருந்து வீரபாண்டியபட்டினம் வழியாக கடற்கரை வழியை ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூருக்கும் வீரபாண்டிபட்டினத்திற்கும் இடையே சுமார் 200 மீட்டரில் ஒரு சுவர் போன்ற அமைப்பை கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
பாண்டியர் காலத்தில் ஏரல் அருகே கொற்கை துறைமுகம் மிகவும் சிறப்பு பெற்று இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பணிகள் நடந்துள்ளது. மேலும் கொற்கை துறைமுக பகுதியில் வெளிநாட்டு பயணிகள் வந்து இந்த பகுதியில் உள்ள இடங்களை பார்த்து ரசித்து சென்றுள்ளனர். இதற்கு ஆதாரமாக பல்வேறு நூல்கள் உள்ளது. இந்நிலையில் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பழங்கால சுவரா? அல்லது நடைபாதையாக பயன்படுத்தப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இதனை பார்க்கும்போது மிகவும் நேர்த்தியாக மனிதர்களால் உருவாக்கப்பட்டது போல் உள்ளது.

ஒரு வேளை பண்டைய காலத்தை சேர்ந்ததாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தொல்லியல் துறையினர் இந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இதுகுறித்த தகவல் தெரிவித்தால் நமது தமிழனின் பண்பாடுகள் தெரிவதற்கு வாய்ப்பாக அமையும்”, என்றார்.

கடந்த மாதம் தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல்சார் ஆய்வு மேற்கொள்வதற்காக முன்கள ஆய்வு பணி, முன்கள ஆய்வு கப்பலில் ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் நடந்தது. இந்த ஆய்வில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதா? என்ற விவரம் தெரியவில்லை. இருப்பினும் திருச்செந்தூரில் இருந்து வீரபாண்டியபட்டினம் செல்லும் கடற்கரை வழியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த சுவர் போன்ற அமைப்பை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.