டெஹ்ரான் :ஈரானில், ஆட்சிக்கு ஆதரவான பாடலை பாட மறுத்த 15 வயது பள்ளி மாணவி, பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில், பொது இடங்களில் பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிவது கட்டாய சட்டமாக உள்ளது. இதை மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
ஹிஜாப் அணியாமல் சென்றதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அடக்குமுறைக்கு எதிராக ஈரானிய பெண்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரானின் அர்டாபில் என்ற இடத்தில் உள்ள ஷாஹீத் பெண்கள் உயர் நிலைப்பள்ளியில், அந்நாட்டு பாதுகாப்பு படையினர், கடந்த 13ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவியரிடம் ஆட்சிக்கு ஆதரவான பாடலை பாடும்படி உத்தரவிட்டனர்.
இதற்கு சில மாணவியரை மறுப்பு தெரிவித்தனர். பாடலை பாடாத மாணவியரை பாதுகாப்பு படையினர் கொடூரமாக தாக்கினர்.
இதில் காயம் அடைந்த அஸ்ரா பனாஹி, 15, என்ற மாணவி சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினரின் அத்துமீறலுக்கு ஈரான் ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இந்த படுகொலைக்கு பொறுப்பேற்று ஈரான் கல்வி அமைச்சர் யூசப் நோரி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என, வலியுறுத்தி உள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்துள்ளது. பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த மாணவி, அதன் காரணமாகவே உயிரிழந்ததாக அவரது உறவினர், ‘டிவி’யில் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த சம்பவத்தை அடுத்து ஈரானில் போராட்டம் வலுத்துள்ளது. பெண்கள் சாலைகளில் இறங்கி ஹிஜாப் துணியை பகிரங்கமாக கழட்டி வீசி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஈரானின் ஏழு மாகாணங்களில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தாக்குதல்களுக்கு 23 குழந்தைகள் பலியாகி உள்ளதாக மனித உரிமை ஆணைய அலுவலக செய்தி தொடர்பாளர் ரவீணா ஷம்தாசனி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்