புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் 2ம் கட்டமாக எஞ்சியுள்ள 6 தொகுதிகளுக்கான பாஜ வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இமாச்சல பிரதேசத்தில் அடுத்த மாதம் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட உள்ளது. வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது. வேட்பு மனு தாக்கலுக்கு வரும் 25ம் தேதி கடைசி நாள்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று முன்தினம் வெளியிட்டது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், மீதமுள்ள 6 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜ நேற்று வெளியிட்டது. இம்மாநிலத்தில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை படிப்படியாக வெளியிட்டு வருகிறது.