புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கனிக்குமார். இவரது தொலைபேசி எண்ணுக்குக் கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அதில், ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும் லட்சக்கணக்கில் தனி நபர் கடன் கொடுக்கிறோம் என்று வந்திருக்கிறது. உடனே, அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட கனிக்குமார், தனக்கு ரூபாய் ஐந்து லட்சம் தனி நபர் கடன் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து, இரண்டுக்கும் மேற்பட்ட எண்களில், `தனலெட்சுமி பைனான்ஸில் இருந்து பேசுகிறோம்…’ என்று அடுத்தடுத்து கனிக்குமாரைத் தொடர்பு கொண்டவர்கள், அவரது ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பக் கோரியிருக்கின்றனர். உடனே, அவரும் தன்னிடம் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் அனுப்பியிருக்கிறார். அடுத்த சில தினங்களில் மீண்டும் கனிக்குமாரைத் தொடர்புகொண்டவர்கள், `உங்கள் லோன் அப்ரூவல் ஆகிவிட்டது.

அதற்கான, டாக்குமென்ட் சார்ஜ், இன்ஸ்சூரன்ஸ், உங்களுடைய அக்கவுன்ட்டில் வரவுவைக்க டி.டி எடுக்கும் செலவு கட்டணங்களைக் கட்ட வேண்டும். அப்போதுதான் லோன் ஓகே ஆகும்’ என்று கூறி அக்கவுன்ட் நம்பரை அனுப்பியிருக்கின்றனர். உடனே, லோன் கிடைத்துவிடும் என்ற ஆசையில் ரூ.2,03,100 பணத்தை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கில் கனிக்குமார் செலுத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கு லோன் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனிக்குமார், புதுக்கோட்டை சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவுசெய்த சைபர் க்ரைம் போலீஸார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள், மொபைல் எண்களை ட்ராக் செய்தபோது, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பேர் கூட்டாகச் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, டெல்லி சென்ற புதுக்கோட்டை சைபர் க்ரைம் போலீஸார் டெல்லியைச் சேர்ந்த ரகுபதி, முகமது எஸ்தாக், முகமது ஷாஃபி ஆலம், பாலாஜி, பிரியா ஆகிய ஐந்து பேரையும் கைதுசெய்தனர். மோசடிக்குப் பயன்படுத்திய லேப்டாப், ஆன்டிராய்டு போன்கள், சிம் கார்டுகள், எ.டி.எம் கார்டு, ரொக்கப்பணம் ரூ.5,000 உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். தொடர்ந்து, குற்றவாளிகளை புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்த சைபர் க்ரைம் தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே பாராட்டினார். தமிழகத்தைச் சேர்ந்த இன்னும் சிலரிடம் இந்த கும்பல் தனி நபர் கடன் தருவதாக ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டிருக்கிறதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டபோது, “தனி நபர் கடன் கொடுக்கிறோம் என்று பிரபலமான வங்கிகளிலிருந்துகூட உங்களுக்கு குறுஞ்செய்திகள் வரலாம். அல்லது போனில் பேசலாம். உடனே, அது உண்மை என்று நம்பி ஏமாறக்கூடாது. குறிப்பாக, வங்கிக் கடன் வேண்டுபவர்கள் அருகே உள்ள வங்கியைத் தொடர்பு கொண்டு ஆலோசனைக் கேட்க வேண்டும். இதுபோன்று ஏமாற்றப்படுவதை தவிர்க்கலாம்.
தினமும் ஏராளமான குறுஞ்செய்திகள் நம் தொலைபேசி எண்ணுக்கு வருகின்றன. அதிலும், குறிப்பாக `உங்களுடைய எண்ணுக்கு லட்சக்கணக்கில் பணம் விழுந்திருக்கிறது’ என்று கூறி குறுஞ்செய்திகள் வரக்கூடும். இந்த குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறக்கூடாது. நாம் தொலைபேசியை பயன்படுத்துவதில் விழிப்புணர்வுடன் இருந்தால், மோசடிகளை தவிர்க்கலாம்” என்றனர்.