'சிவபெருமானை மட்டுமே வழிபடுகிறேன்…' – கேதர்நாத்தில் பிரதமர் மோடி தரிசனம்

பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை முன்னிட்டு புகழ்பெற்ற கேதர்நாத், பத்ரிநாத் கோயில்களில் பிரதமர் மோடி இன்று (அக். 21) தரிசனம் மேற்கொண்டார். 

பிரமதராக பதவியேற்ற பின், மோடி தற்போது ஆறாவது முறையாக கேதர்நாத்திற்கும், இரண்டாவது முறையாக பத்ரிநாத் கோயிலுக்கும் சென்றுள்ளார். அவரின் வருகையை தொடர்ந்து இருகோயில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பூக்கள் அக்கோயில்கள் முழுமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

இதைத்தொடர்ந்து, இன்று காலை கேதர்நாத் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி, அங்கு எடுத்த புகைப்படம் அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்  பகிரப்பட்டுள்ளது. அதில்,”மிகப்பெரும் மலையோரங்களை ரசித்தேன். அங்கிருந்த முனிவர்களையும் வணங்கினேன். தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், பெரும் பாம்புகள் உள்ளிட்டவர்களால் சூழப்பட்ட கேதாரப் பெருமானான சிவபெருமானையே நான் வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் மோடி, வெள்ளை நிறத்திலான பாரம்பரிய உடை அணிந்திருந்தார். அதில், ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. கேதர்நாத் கோயிலில் பூஜை மேற்கொண்ட பிரதமர் மோடி, கௌரிகுண்ட் – கேதர்நாத் 9.7 கி.மீ தூரத்திற்கான ரோப்கார் சேவை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

இதன்மூலம், கௌரிகுண்ட் பகுதியில் இருந்து கேதர்நாத் கோயிலை பக்தர்கள் அரைமணி நேரத்தில் அடைந்துவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆதி சங்கரரின் சமாதியிலும் பிரதமர் சிறிது நேரத்தை செலவிட்டார். 

ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதர்நாத் கோயிலில் தரிசனத்தை முடித்த பின்னர், சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்கு பிரதமர் புறப்பட்டார். 

பத்ரிநாத் கோயிலின் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும் அவர் பார்வையிட இருக்கிறார். தொடர்ந்து, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலுகளுக்கு இடையே சாலை மற்றும் ரோப்கார் சேவைக்கான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று மதியம் அடிக்கல் நாட்ட இருக்கிறார். இத்திட்டங்கள் 3,400 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்திய விமானப்படையின் விமானத்தின் மூலம் உத்தரகண்ட் தலைநகர் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று காலை வந்தடைந்தார். அவரை உத்தரகாண்ட கவர்னர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் அஜய் பட் ஆகியோர் விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பை அளித்தனர். 

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! கிராஜூட்டி, ஓய்வூதியம் பறிக்கப்படலாம்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.