புதுடெல்லி: வடக்கு டெல்லியில் உள்ள திபெத் அகதிகளுக்கான குடியிருப்பில் வசித்து வந்த சீன பெண் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அவர் உளவாளியாக இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு பகுதிக்கு அருகில் உள்ளது மஞ்சு கா டில்லா. திபெத் அகதிகள் குடியிருப்பான இது சுற்றுலா பயணிகளுக்கு பெயர் பெற்றது. இங்கு வசித்து வந்த சீனப் பெண் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட பெண்ணின் அடையாள ஆவணங்களை சோதனை செய்தபோது, அவரது பெயர் டோல்மா லாமா என்றும், அவர் நேபாள தலைநகர் காத்துமண்டுவில் இருந்து வந்திருப்பதாகவும் தெரியவந்தது. அவர் தன்னை ஒரு புத்த மத துறவி போல அடையாளம் காட்டிக்கொண்டு துறவிகள் போல நீண்ட சிவப்பு ஆடை அணிந்தும் இருந்தார். அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் காய் ருயோ (Cai Ruo).
நாங்கள், எஃப்ஆர்ஆர்ஓ எனப்படும் வெளிநாட்டினருக்கான உள்ளூர் பதிவு அதிகாரியிடம் உள்ள ஆவணங்களை பரிசோதித்தபோது காய் ருயோ கடந்த 2019ம் ஆண்டு சீனா பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்திருப்பதும் தெரியவந்தது. அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தன்னைக் கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அந்தப் பெண்ணிற்கு ஆங்கிலம், நேபாளி, மாண்டரின் ஆகிய மொழிகள் தெரிந்திருக்கிறது” என்று தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பெயரில் அவரை கைது செய்துள்ள இந்தப் பெண்ணின் வழக்கை டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகின்றது.