கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், 500 ஏக்கருக்கு மேல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளன. இவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உறுதியளித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாதல்படுகை, முதலைமேடு திட்டு, ஆச்சாள்புரம், அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் சேதமடைந்த நெற்பயிர்களை எடுத்துக்காட்டிய பொதுமக்கள், “கொள்ளிடம் ஆற்றில் உள்ள 2 மதகுகளில் ஷட்டர் பழுதடைந்ததால், விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து, 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டன” என வேதனையுடன் தெரிவித்தனர். இதையடுத்து, பழுதடைந்த ஷட்டர்களை பார்வையிட்ட அமைச்சர் மெய்யநாதன், உடனடியாக புதிய ஷட்டர்கள் அமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
கொள்ளிடம் ஆற்றில் 2.21 லட்சம் கன அடி தண்ணீர் வந்ததால், இப்பகுதியில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி, மாதிரிவேளூர் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதுமாக தண்ணீரால் சூழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 9 முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பகுதியில் விவசாய பாதிப்புகள் குறித்து ஆட்சியர், வேளாண் துறை மூலம் உரிய கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய 2 இடங்களிலும் தலா ரூ.3 கோடி மதிப்பில் புயல் பாதுகாப்பு மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பான கோரிக்கையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். அளக்குடி பகுதியில் ரூ.47 கோடி மதிப்பில் ஆற்றின் கரையைப் பலப்படுத்த அரசின் நிதி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் உள்ள பழுதடைந்த ஷட்டர்கள் மாற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, ஆட்சியர் ரா.லலிதா, எஸ்.பி. என்.எஸ்.நிஷா, எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன்(பூம்புகார்), எம்.பன்னீர்செல்வம்(சீர்காழி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.