மேற்கு உ.பி.யின் 30 மாவட் டங்களில் முஸ்லிம்கள் 27 சதவீதம் பேர் வாழ்கின்றனர். இங்கு சமாஜ்வாதி மற்றும் மறைந்த அஜித்சிங்கின் ஆர்எல்டி ஆகிய கட்சிகளுக்கு செல்வாக்கு அதிகம்.
கடந்த உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் 88 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் மாயாவதி முஸ்லிம்களை போட்டியிட வைத்தார். இவர்களில் ஒரு தொகுதியில் கூட பிஎஸ்பி வேட்பாளர்களால் வெல்ல முடியவில்லை. காங்கிரஸ் இங்கு ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதற்கு முஸ்லிம்களின் ஆதரவு ஒரு காரணம். இவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர் இம்ரான் மசூத். இவர் கடந்த பேரவை தேர்தலில் சமாஜ்வாதியில் இணைந்திருந்தார். இங்கு அவருக்கு போட்டியிடும் வாய்ப் பளிக்கவில்லை என்பதால், நேற்று முன்தினம் திடீர் என மாயாவதியை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார். இம்ரானை மேற்கு உ.பி.யின் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளராக மாயாவதி நியமித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தலுக்காக முஸ்லிம்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளை உ.பி. அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. . தற்போது மசூத் கட்சி மாறியதால் மேற்கு பகுதியில் ஆர்எல்டி மற்றும் சமாஜ்வாதியின் முஸ்லிம் வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் பலன் பாஜகவிற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கெனவே, முஸ்லிம் வாக்குகளை நம்பி தேர்தலில் பாஜக பிரச்சாரம் செய்வதில்லை. இக்கட்சியில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.