விருதுநகர்: கண்மாயில் தரைதட்ட தாழ்வாகத் தொங்கும் மின்கம்பி; அச்சத்தில் மக்கள்!

பருவமழைக் காலங்களில் மதுரை மாவட்டம், திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் பகுதிகளில் பெய்யும் மழைநீர் கால்வாய் ஓடை வழியே பாய்ந்து காரியாபட்டி பகுதியிலுள்ள குண்டாற்றில் கலக்கிறது. இந்த மழைவெள்ளம் விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி, பந்தனேந்தல் கண்மாய்… அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வழியே வீணாகக் கடலில் கலந்துவந்தது. எனவே, பந்தனேந்தல் கண்மாய்க்குச் செல்லும் மழைவெள்ளத்தைத் தடுப்பணைகட்டி தேக்கி, வறட்சியான காலங்களில் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.

மின்கம்பிகள்

தொடர்ந்து, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பந்தனேந்தல் கண்மாயில் தடுப்பணைகட்ட வலியுறுத்தி, அப்போது திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த தங்கம் தென்னரசும் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாகச் சுமார் ரூ.10.11 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி தடுப்பணைக் கரைகள் பலப்படுத்தப்பட்டு, பாசன ஷட்டர்கள் அமைத்து பணிகள் முடிக்கப்பட்டன. தடுப்பணைப் பணிகள் முடிவடைந்ததையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டுக்காக அணை திறந்துவைக்கப்பட்டது.

ஆபத்து

இதன் மூலம் பந்தனேந்தல், வக்கணாங்குண்டு, கரியனேந்தல், தோணுகால், கல்குறிச்சி திருச்சுழி, தமிழ்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன. கண்மாய்களுக்கு வரும் பாசன நீர்வரத்து காரணமாக அந்தப் பகுதிகளில் இரு போகம் நெல் விவசாயம் நடப்பதுடன், தோட்ட விவசாயமும் நன்கு நடைபெற்றுவருகிறது. ஆனால், தடுப்பணைக் கரைகள் இருபுறத்திலும் மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் உயர்மின் அழுத்தக் கம்பிகளால் பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

கண்மாய்

இது குறித்து காரியாப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி நம்மிடம் பேசுகையில், “கரைகள் பலப்படுத்தப்பட்டு, மின்கம்பத்தை ஈடுசெய்யும் அளவுக்குத் தடுப்பணை உயரம் அதிகரிப்பட்டதால், உயர்மின் அழுத்தக் கம்பிகள் தடுப்பணையின் தரையைத் தொட்டுவிடும் அளவுக்கு மிகவும் தாழ்வாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இது, தடுப்பணைக் கரை வழியே நடந்து செல்பவர்களின் தலைதட்டும் அளவுக்குத் தாழ்வாக இருக்கிறது. ஆடு, மாடு கால்நடை வளர்ப்போர், நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் என தினம்தோறும் பல்வேறு தரப்பினர் கண்மாய்க் கரையை மின் ஆபத்து தெரிந்தே கடந்து செல்வது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவிர விடுமுறை நாள்களில் பள்ளி மாணவர்களும் கண்மாய்க்குக் குளிக்கவருவதால், அறியாமையில் தொட்டால்கூட பேரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. எனவே, உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன்பு தடுப்பணைக் கரைகளின் இருபுறமும் இருக்கக்கூடிய மின்கம்பங்களின் உயரத்தை அதிகரித்து உயர்மின் அழுத்தக் கம்பிகளால் ஆபத்து ஏற்படாதவாறு நிலைநிறுத்த வேண்டும்” எனக் கூறினார்.

கண்மாய் கரை
நீர்கசிவு

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக காரியாபட்டி பகுதியில் பெய்துவரும் மழையால் குண்டாறில் தண்ணீர்வரத்து அதிகரித்திருக்கிறது. நீர்வரத்து காரணமாக தடுப்பணையின் நீர்மட்டம் உயர்வது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தடுப்பணை மதகுகளில் ஏற்பட்டிருக்கும் நீர்க்கசிவால் மழைநீர் பயனின்றி வீணாகக் கால்வாயில் பாய்வதாக விவசாயக்குழுவினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, பழுதுபட்டிருக்கும் தடுப்பணை மதகுகளைச் சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

இது குறித்து, “பந்தனேந்தல் கண்மாயில் தாழ்வாகத் தொங்கும் உயர்மின் அழுத்தக் கம்பிகள் தொடர்பாக புகார் வரப்பெற்றிருக்கிறது. தெருவிளக்குகளுக்காக மின்சாரம் கொண்டுசெல்லப்படும் அந்த மின்பாதையில் தற்போது மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, வேறு எந்த இடத்தில் புதிதாக மின்கம்பங்கள் நட்டு மின் இணைப்பு வழங்கலாம் என விருப்பம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறோம். அதற்கு பதில் கடிதம் இன்னும் வரவில்லை. அதிகாரிகளிடமிருந்து பதில் வரப்பெற்றதும் மின்வாரியத்தின் சார்பில் மாற்றுவழியில் மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் காரியாப்பட்டி பகுதி மின்வாரிய உதவி இன்ஜினீயர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.