சென்னை: தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் முழுவதும் நிறைவு பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவ மழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் நிறைவடைகிறது. இந்த தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 477 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான அளவை விட 45 சதவீதம் அதிகம் ஆகும்.
தமிழகம், புதுவையில் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பாக 328 மி.மீ மழை பதிவாகும். குறிப்பாக, கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் பெய்த மழை அளவுகளில் இம்முறைதான் அதிகபட்சம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தற்போது தென்மேற்கு பருவ மழை நிறைவடையும் நிலையில் உள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்மேற்கு பருவமழை விதர்பாவின் ஒரு சில பகுதிகளில் நிறைவடைவந்துள்ளது. சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவின் மீதமுள்ள பகுதிகள், தெலங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் மத்திய வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் இன்று நிறைவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நிறைவடையும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Southwest Monsoon has further withdrawn from some more parts of Vidarbha; remaining parts of Chhattisgarh, Odisha & North Bay of Bengal; some parts of Telangana, Coastal Andhra Pradesh & Central Bay of Bengal today, the 21st October, 2022. pic.twitter.com/1y1b8RdJhx
— India Meteorological Department (@Indiametdept) October 21, 2022