சனி மகாபிரதோஷம்: இன்று கட்டாயம் வழிபாடு செய்யவேண்டிய ராசிக்காரர்கள் மற்றும் வழிபடும் முறை!

பிரதோஷங்களில் சிறப்பு வாய்ந்தது சனிக்கிழமை வரும் பிரதோஷம். அதனால்தான் அதை சனிமகாபிரதோஷம் என்று அழைக்கிறோம்.

ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி தினம். எனவே சனிக்கிழமைகளில் வரும் திரயோதசி திதிக்கு மகாபிரதோஷம் என்ற பெயர் உண்டானது. பெயரில் மட்டுமல்ல வழிபடுபவர்களுக்கு வரங்கள் அருள்வதிலும் சனிக்கிழமை பிரதோஷம் மகாபிரதோஷம் தான்.

சிவபெருமான்

பொதுவாக பிரதோஷ நாளின் பிரதோஷ வேளையில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் என்றும் அந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை. அதிலும் சனிப்பிரதோஷ வேளையில் நாம் சிவபெருமானை தரிசனம் செய்தாலே நமக்கு நற்பலன்கள் உண்டாகும் என்கிறார்கள். சனிப்பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால் ஓர் ஆண்டு முழுவதும் பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

சனிப்பிரதோஷ பலன்கள்

துன்பங்களால் வாழ்வில் திகைத்துப்போய் சோர்ந்து நிற்கும் அன்பர்களுக்கு சனிப்பிரதோஷம் ஓர் அருமருந்து. இந்த வாழ்க்கைதான் பாற்கடல். அதில் அமுதல் என்பது நாம் அனைவரும் விரும்பும் மகிழ்ச்சி. ஆனால் வாழ்க்கையில் நம் முயற்சிகளுக்குப் பலன்காகக் கிடைப்பது விடம் என்னும் துன்பம். அதற்கு அஞ்சி நாம் கண்ட இடங்களுக்கும் ஓடுவதைவிட சிவன் சந்நிதிக்குச் செல்வதே சரியான தீர்வு. காரணம் அவரே நம் துன்பம் என்னும் விடத்தை விழுங்கி மகிழ்ச்சி என்னும் அமிழ்தத்தை அருள்வார். அதுவும் சனிக்கிழமை பிரதோஷ தினத்தில் சென்று வழிபாடு செய்தால் நம் பிரச்னைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சனிபகவான்

சனிப்பிரதோஷமும் சனிபகவானும்

காரணம், சனிக்கிழமை சனிபகவானுக்கு உரியது. சனிபகவான் நியாயாதிபதி. நம் கர்மங்களுக்கு ஏற்ப வாழ்வில் நன்மை தீமைகளை அருள்பவர். அதற்கு ஏற்பவே நம் ராசி நட்சத்திரங்களில் சனிப்பெயர்ச்சிகள் நிகழும். நன்றாக இருக்கும் வாழ்வில் திடீரென்று தீமைகள் நிகழும்போது ஏன் நமக்கு இப்படி நிகழ்கிறது என்பதை நினைத்து நாம் குழம்பிப்போவோம். ஆனால் அதன் காரணம் ஆராய்ந்துபார்த்தால் அது சனிப்பெயர்ச்சியோடு தொடர்புடையதாகவே இருக்கும். சனிபகவான் ஒரு ராசிக்கு 1,2, 4, 7,8,12 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும்போது நம் கர்மாவில் உள்ள தீவினைகளுக்கு ஏற்ப பலன்களைக் கொடுப்பார். அப்படித் துன்பப்படுபவர்களுக்கு அருமருந்து சனிப்பிரதோஷம்.

சனிப்பிரதோஷ தினத்தன்று சிவ வழிபாடு செய்தால் சனிபகவானின் தரும் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். சிவபெருமானின் திருவடிவங்களில் ஒருவர் காலபைரவர். சனிபகவான் கால பைரவரை குருவாக ஏற்று வழிபாடு செய்தவர். எனவே தன் குருவான சிவனை வழிபடுபவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. அடியார்களுக்கு நவகோள்களும் நல்ல நல்ல என்பது தானே சம்பந்தர் வாக்கு.

கட்டாயம் வழிபாடு செய்ய வேண்டிய ராசிகள்

குறிப்பாக சனிப்பெயர்ச்சியால் தற்போது துன்பப்பட்டுவரும், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கட்டாயம் இன்று (22.10.22) சிவ வழிபாடு செய்யவேண்டும். முடிந்தால் பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்யுங்கள். இயலாதவர்கள் இன்றைய நாளில் ஏதோ ஒரு நேரத்தில் சிவாலயம் சென்று வழிபடுங்கள். கால பைரவருக்கு நீல நிற மலர்களை சமர்ப்பித்து வழிபடுங்கள். அதுவும் இயலாதவர்கள் வீட்டிலேயே சிவபுராணம் பாராயணம் செய்வது சிறப்பு.

கிடைத்தற்கரிய இந்த சனிப்பிரதோஷ நாளில் சிவவழிபாடு செய்து அனைவரும் நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.