தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பப்லு ப்ரித்விராஜ். இவர் அஜித் உள்ளிட்டோருடனும் நடித்திருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி சீரியல்களிலும் அதிகம் நடிக்கும் பப்லு சிறப்பாக நடனம் ஆடக்கூடியவரும்கூட. ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்பு நடுவராக பங்கேற்றபோது இவருக்கும், சிம்புவுக்கும் முட்டிக்கொண்டது இன்னமும் பலருக்கு நினைவிருக்கலாம். அதேபோல் ஜெயா டிவியில் ஒளிபரப்பான சவால் என்ற நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி பிரபலமானவர். அந்த நிகழ்ச்சியை அவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவருக்கு தற்போது 56 வயதாகிறது. ஏற்கனவே திருமணமாகி ஆகி அஹத் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது.
இந்தச் சூழலில் பப்லு மலேசியாவில் தொழில் தொடங்கியதாகவும் அங்கு அவருக்கு 23 வயது பெண் உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இருவருக்குமான பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது யூட்யூப் சேனல் மூலம் விளக்கமளித்திருக்கிறார் பப்லு. அவர் பேசியிருக்கும் வீடியோவில், “இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக பலர் ஃபோன் போட்டு கேட்கிறார்கள். திருமணம் செய்யப்போகிறேன், ஆனால் இப்போது இல்லை, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையை தனித்தனியாக வைக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேசியாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் சிலர் அதை விடமாட்டேன் என்கிறார்கள்.
நான் எதை செய்தாலும் அதை வெளிப்படையாக செய்பவன். உங்கள் எல்லோருக்கும் தெரிந்து உங்கள் ஆசீர்வாதத்துடன்தான் திருமணம் செய்வேன். திருட்டுத்தனமாக எதையும் செய்யமாட்டேன்” என்றார். முன்னதாக, தனது முதல் மனைவி பீனாவை அவர் ஏற்கனவே பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.