சத்தீஸ்கரில் குட்டி யானை கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த யானைக் கூட்டம் கிராமத்துக்குள் புகுந்து நேற்று ஒருவரை மிதித்துக் கொன்றது.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கோர்பா மாவட்டத்தில் உள்ள பனியா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சமீபத்தில் யானைக் குட்டி ஒன்றை கொன்று வயலில் புதைத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ௪௪ யானைகள் உள்ள கூட்டம், மூன்று கிராமங்களுக்குள் புகுந்து ௨௨ ஏக்கரில் இருந்த நெல் பயிர்களை சேதப்படுத்தின. நேற்று தேவ்மத்தி என்ற கிராமத்துக்குள் புகுந்த இந்த யானைக் கூட்டம் மாட்டு கொட்டகையில் படுத்திருந்த பின்டாவர் சிங் என்பவரையும் அவரது மூன்று கால்நடைகளையும் மிதித்து நசுக்கி கொன்றன.
இது குறித்து, வன அலுவலர் பிரேமலதா யாதவ் தெரிவித்ததாவது: விசாரணையில் குட்டி யானை கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, வயலில் புதைக்கப்பட்ட யானையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, யானைக் கூட்டம் மிதித்து பலியான பின்டாவர் சிங் குடும்பத்துக்கு முதல் கட்டமாக ௨௫ ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. உரிய விசாரணைக்குப் பின், ௫.௭௫ லட்சம் ரூபாய் வழங்கப்படும். யானைகளிடம் இருந்து பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வனப்பகுதிகள் நிறைந்த சத்தீஸ்கரில், அடிக்கடி யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ௨௧௦ பேர் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் ௪௭ யானைகள், நோய்வாய்பட்டும், வயது மூப்பு காரணமாகவும் மற்றும் மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement