புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 75 ஆயிரம் பேருக்கான பணி நியமன ஆணையை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார். ஒன்றிய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி வழங்கும் வகையில் நியமன நடைமுறையை தொடங்கி உள்ளதாக பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
அதன்படி ஒன்றிய அரசின் குரூப் ஏ மற்றும் பி (அரசிதழ் பதிவு பணிகள்), குரூப் பி (அரசிதழ் பதிவு அல்லாத பணிகள்) மற்றும் குரூப் சி பணிகளில் ஆட்தேர்வுகள் நடைபெற்றன. மேலும் மத்திய ஆயுதப் படை வீரர்கள், உதவி-ஆய்வாளர்கள், காவலர்கள், சுருக்கெழுத்தர்கள், வருவான வரி ஆய்வாளர்கள் உள்ளிட்ட நியமனங்கள் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையம், அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே நியமன வாரியம் உள்ளிட்டவை மூலமாக தேர்வுகள் மேற்ெகாள்ளப்பட்டன. விரைவான பணி நியமனத்துக்காக தேர்வுமுறைகள் எளிமையாக்கப்பட்டன.
இந்நிலையில் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் ‘ரோஸ்கர் மேளா’ என்ற மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், 38 ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிகளில் சேருவார்கள். வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்பு என்ற இலக்கை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது.
இன்று நாடு முழுவதும் நடந்த நிகழ்ச்சியில், 50 ஒன்றிய அமைச்சர்கள் 19,692 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை நேரடியாக வழங்கினர். அதன்படி, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜெய்ப்பூரிலும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா போபாலிலும், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சண்டிகரிலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையிலும் பணிநியமன ஆணைகளை வழங்கினர்.
இந்நிலையில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை குறித்து ஆளும் ஒன்றிய பாஜக அரசு மீது எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘ரோஸ்கர் மேளா’ என்ற மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன.