புதுடெல்லி: சர்வதேச காவல் அமைப்பின் (இன்டர்போல்) 90-வது பொதுச் சபை கூட்டம் டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நேற்று முடிந்தது. இறுதிநாள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். தீவிரவாதத்தை நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம், சிறிய தீவிரவாதம், பெரிய தீவிரவாதம் என வேறுபடுத்தி பார்க்க முடியாது. அனைத்து இன்டர்போல் உறுப்பு நாடுகளும் இந்த சவாலை எதிர்கொள்ள வீறு கொண்டு எழவேண்டும். இந்தப் பிரச்சினையை கையாள்வதில் உலகளாவிய போலீஸ் அமைப் பின் பங்கு மிக முக்கியமானது.
எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை தடுப்பதற்கு எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மிக அவசியமாகும். எனவே இன்டர்போலும் அதன் உறுப்பு நாடுகளும் கைகோத்து செயல்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் நீண்ட கால அளவிலானது, விரிவானது மற்றும் தொடர்ச்சியானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக இன்டர்போலுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதி பூண்டுள்ளது.
இந்தியாவில் அனைத்துவித சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட காவல் துறையை உருவாக்க பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தேசிய அளவிலான தரவுகள் தளத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்த தகவல்களை காவல்துறை அமைப்புகள் திறம்பட பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.