கோலார் நகர்… விக்ரம் – ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் இதுவா?

சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் கோப்ரா படுதோல்வியடைந்தது. பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனையடுத்து அவர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் படம் உருவாக இருக்கிறது. இதற்கான லொக்கேஷன் தேடும் பணியில் பா.இரஞ்சித் தனது உதவி இயக்குநர்களுடன் ஈடுபட்டிருந்தார். அந்தப் பணி முடிந்தவுடன் சமீபத்தில் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது.

அந்தப் பூஜையில் விக்ரம், பா.இரஞ்சித், ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இரஞ்சித்துடன் இணைந்து எழுத்தாளர் தமிழ்ப்பிரபா திரைக்கதை எழுதுகிறார். முதல்முறையாக இரஞ்சித்தும் விக்ரமும் இணைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி சியான் 61 படம் பான் இந்தியா படமாக வெளியாகுமென்று தகவல் வெளியான சூழலில், பான்  இந்தியா என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை கிடையாது என இரஞ்சித் கூறியிருந்தார். இதற்கிடையே இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவை இரஞ்சித் நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் – பா.இரஞ்சித் படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சியான் 61 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது. இது ஒரு கில்லர் ரைடாக இருக்கப்போகிறது. இசையை பொறுத்தவரை மிகவும் சுவாரஸ்யமான கதை” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் டெஸ்ட் ஷூட் தற்போது நடந்துவருவதாகவும், விரைவில் படக்குழு ஷூட்டிங்குக்கு செல்லவிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்துக்கு கோலார் நகர் என பெயர் வைக்கப்படலாம் எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத சூழலில் இதுதொடர்பான அறிவிப்பு தீபாவளி அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.