ஊழல்.. ஆளுநர் தான் பொறுப்பு..! – பன்வாரிலால் குற்றச்சாட்டுக்கு கே.பி.அன்பழகன் மறுப்பு!

தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டை, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சண்டிகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித், “தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக ஆளுநராக இருந்தது மிகவும் மோசமான கால கட்டம் என்றும், அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, 40 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது,” என்றும் குற்றம் சாட்டினார். இது, தற்போது தமிழகத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

இந்நிலையில், தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டை, அதிமுகவைச் சேர்ந்த தமிழக முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக தர்மபுரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியது போல், தமிழகத்தில் எந்த நிகழ்வும் இல்லை. தமிழக ஆளுநராக அவர் இருந்த போது, துணைவேந்தர் நியமனத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வாங்குகின்றனர் என, ஒரு விழாவில் பேசினார். நான் அப்போதே அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, விளக்கம் கொடுத்துள்ளேன்.

ஒரு துணைவேந்தரை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானவுடன், தேடுதல் குழு அமைக்கப்படுகிறது. அக்குழு, 10 பேரை தேர்வு செய்து, ஆளுநருக்கு அனுப்புகிறது. அதில், மூவரை தேர்வு செய்து அந்த, மூன்று பேரிடமும் ஆளுநர் நேர்காணல் நடத்துகிறார். இந்த நேர்காணலில் அரசு சார்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கும், உயர் கல்வித் துறைக்கு எந்த தொடர்பும் இல்லை.

இதில் அரசுக்கோ, முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சருக்கோ தொடர்பு இல்லை. இந்நிலையில், தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு, 40 கோடி முதல், 50 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது என, பன்வாரிலால் புரோஹித் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.

தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் துணைவேந்தர்களை நியமிக்கின்ற வாய்ப்பு, அங்கு ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு இல்லை என்பதால், தமிழகத்தின் மீது குறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் துணைவேந்தர் நியமனம் என்பது, முழுக்க, முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்த தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு ஆளுநரே. இதில் ஆளுகின்ற அரசுக்கோ, முதல்வருக்கோ, கல்வித் துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை.

ஒருவேளை அவ்வாறு பணம் கைமாறி இருந்தால், அது ஆளுநரையே சாரும். மேலும், 22 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என, அவர் சொல்கிறார். இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்திருந்தால், அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். அவர், கூறுவது தவறான தகவல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.