அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

“7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் மருத்துவப் பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினியை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்,” என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் புதிய அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகவியல் துறை பேராசிரியர்களை அவர் கெளரவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ள வரிசையில், இன்று சிறுநீரகம், இருதயம், உள்ளிட்ட ஒன்பது வகையான பரிசோதனைகள், முழு உடல் பரிசோதனை மையத்தில் தொடங்கப்பட்டு உள்ளன.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த 6 மாதங்களில் மூளைச்சாவடைந்த 16 பேரிடம் உடல் உறுப்புகள் பெறப்பட்டு உள்ளன. பெறப்பட்ட உடல் உறுப்புகளை வைத்து 84 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள். தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் இந்தாண்டு தீக்காயம் குறைந்த அளவிலேயே இருக்கும்.

அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்தாண்டை போல் இந்தாண்டு, மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.