நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் நடிகையை மிரட்டி ஆபாச படம்: ஓடிடி தளம் மீது பரபரப்பு புகார்

திருவனந்தபுரம்: டிவி மற்றும் வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைத்து மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்த ஓடிடி தளம் மற்றும் பெண் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க  திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம் நடிகையும் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள வெங்கானுர் பகுதியை சேர்ந்த 26 வயதான ஒரு வாலிபர் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும், திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் ஸ்பர்ஜன் குமாருக்கும் 2 நாட்களுக்கு முன் ஒரு புகார் மனு அனுப்பியிருந்தார். அதில், ஒரு ஓடிடி  நிறுவனத்தில் வெளியாக உள்ள வெப் தொடரில் நாயகன் வாய்ப்பு தருவதாக கூறி ஆபாச படத்தில் முழு நிர்வாணமாக நடிக்க வைத்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இதே ஓடிடி தளத்திற்கு எதிராக மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு இளம் நடிகையும் புகார் கொடுத்துள்ளார். மலப்புரத்தைச் சேர்ந்த இவர் ஒரு சில மலையாள டிவி தொடர்களில் நடித்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவர் கூறுகையில், ‘‘ஓடிடி  தளத்தில் வெப் தொடருக்காக நாயகியாக நடிக்க வைப்பதாக கூறி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினர். எனக்கு சரிவர ஆங்கிலம் தெரியாது என்பதால் முழுவதுமாக படித்துப் பார்க்காமல் கையெழுத்து  போட்டேன். ஒரு பெண் தான் படத்தை இயக்கினார். படப்பிடிப்பு தொடங்கிய மூன்றாவது நாள் தான் அது ஆபாசப் படம் என தெரியவந்தது. அதனால் நான் நடிக்க மறுத்தேன்.

ஒப்பந்தத்தை காட்டி, நடிக்க மறுத்தால் ரூ.7.5 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் கூறி அவர்கள் என்னை மிரட்டினர். இதனால் வேறு வழி இல்லாமல் அந்த படத்தில் நடித்தேன். அந்தப் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இது குறித்து  அறிந்த குடும்பத்தினர் என்னையும், என்னுடைய குழந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். இதனால் நான் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில்தான் தூங்குகிறேன். இது தொடர்பாக திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் முதல்வருக்கு புகார் கொடுக்க உள்ளேன்.  இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே வாலிபர் அளித்த புகாரின் பேரில் விழிஞ்ஞம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.