சகோதரரின் கொலை வழக்கு… மனம் திறந்த அமைச்சர் கே.என். நேரு…

திருச்சி கலையரங்கத்தில் தொலைநோக்கு திட்ட ஆவணம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திருச்சி மாநாட்டில் 7 துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.

அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் எந்தெந்த துறைகளில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஆய்வு செய்து அந்தந்த துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்ய கூட்டம் நடத்தப்பட்டது.

குறிப்பாக ஏழை எளியோருக்கு தேவையான குடி தண்ணீர் உட்பட பல்வேறு திட்டங்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு குறிப்பு போன்று தயாரிக்கப்பட்டு இதன்படி தான் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இன்று டிஜிபி விசாரணை நடைபெற உள்ளதே என்ற கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசுகையில், போலீஸ் விசாரணையில் உள்ளது. அதை பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு வின் உடன்பிறந்த சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012 மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ராமஜெயத்தை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

கொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் பிடிபடாமல் உள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சரியான தகவல்களை துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும். மேலும் துப்பு கொடுப்பவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் என அண்மையில் போஸ்டர் ஒட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.