திருமலை: ஆந்திர சட்டக்கல்லூரியில் தேர்வு எழுதி திரும்பியபோது, பாஸ்டேக் இயங்காத பிரச்னையில் சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்ட சென்னை, மதுரையை சேர்ந்த 11 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்த சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் தனியார் சட்ட கல்லூரிகள் உள்ளன. இந்த சட்ட கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்கள் படித்து செல்கின்றனர். அவ்வாறு கடந்த சில தினங்களாக சட்ட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகளை முடித்து மீண்டும் சென்னைக்கு காரில் நேற்று மாணவர்கள் திரும்பி கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், எஸ்.ஆர்.புரம் வடமாலாப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சட்ட கல்லூரி மாணவர்கள் சென்றபோது பாஸ்டேக் இயங்கவில்லை. அதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள், ‘‘உங்கள் பாஸ்டேக் காலக்கெடு முடிந்துவிட்டது. பணத்தை கட்டி விட்டு செல்லுங்கள்’’ எனக் கூறி ஹெல்மெட்டால் வாகனத்தை அடித்து பின்னால் எடுத்து செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், கோபமடைந்த மாணவர்கள், ‘‘பாஸ்டேக்கில் பணம் உள்ளது. ஸ்கேன் செய்வதில்தான் கோளாறு’’ என கூறினர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்ட கல்லூரி மாணவர்களை தாக்கி உள்ளனர்.
உள்ளூர் பொதுமக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக திரண்டு தமிழகத்திலிருந்து வந்து எங்களிடம் பிரச்னை செய்கிறீர்களா? என கூறி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், கார் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால், கலவரம் போல சுங்கச்சாவடி முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கி.மீட்டர் தூரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வடமாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி சென்னையை சேர்ந்த 9 பேர், மதுரையை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 11 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.