சென்னை/ தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் பரிந்துரைப்படி, காவல் உதவி ஆணையர் உட்பட4 போலீஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 வட்டாட்சியர்கள் விளக்கம் தர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 மே22-ம் தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை, கடந்த 19-ம்தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
‘வன்முறை நடக்கக்கூடும் என்று முன்கூட்டியே தெரிந்தும் காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அப்போதைய ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில் குமார் சி.சரத்கர், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை உட்பட காவல் துறையை சேர்ந்த 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதில் முதல்கட்டமாக, ஆய்வாளராக இருந்த திருமலை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சமூக நீதி, மனித உரிமை பிரிவில் உதவி ஆணையராக உள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியில் இருந்த முதல்நிலை காவலர் சுடலைக்கண்ணு, ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே பணியில் இருந்த சங்கர், சதீஷ் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், காவலர் சுடலைக்கண்ணு 4 இடங்களில் நின்று, துப்பாக்கியால் 17 ரவுண்டுகள் சுட்டதாக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
விளக்கம் அளிக்க நோட்டீஸ்: அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர், 3 வருவாய் துறை அலுவலர்கள் என மொத்தம் 21 பேர் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடுநடத்த, அப்போது நிர்வாக நடுவர்களாக நியமிக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டாட்சியர்கள் சேகர், கண்ணன் ஆகியோர்தான் காவல் துறையினருக்கு உத்தரவிட்டனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலர் உத்தரவிட்டதை அடுத்து, ‘உங்களைஏன் பணி இடைநீக்கம் செய்யகூடாது?’ என்று 17-பி பிரிவின் கீழ்விளக்கம் கேட்டு 3 பேருக்கும், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.