பிரம்மோஸ் ஏவுகணைகளை ரூ.41,500 கோடிக்கு விற்க இலக்கு – சவுதி அரேபியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் வாங்குவதற்கு ஆர்வம்

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதன்படி வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க கடந்த 1998-ம் ஆண்டு ஒப்பந்தம்செய்தன. இந்தியாவின் பிரம்மபுத்திராநதி (Brahmaputra), ரஷ்யாவின் மாஸ்க்வா (Moskva) நதியின் பெயர்களில் இருந்து புதிய சூப்பர்சானிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் (BrahMos) என்று பெயரிடப்பட்டது. படைப்பின் கடவுளான பிரம்மனின் வலிமைமிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இந்த பெயர் வைக்கப்பட்டது.

கடந்த 2001-ம் ஆண்டில் ஒடிசாவில் பிரம்மோஸ் ஏவுகணை முதல்முறையாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு நீர், நிலம், வான்பரப்பில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் முப்படைகளிலும் பிரம்மோஸ் சேர்க்கப்பட்டது.

தற்போது பிரம்மோஸ் ஏவுகணை களை நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும். இது உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாகும். 28 அடிநீளம், 2 அடி விட்டம், 3,000 கிலோ எடைகொண்ட பிரம்மோஸ் ஏவுகணை ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப்பாயக்கூடியது. இந்த ஏவுகணையின் வேகம், பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்சில் நடத்தப்பட்ட சோதனையின்போது பிரம்மோஸ் ஏவுகணை 450 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கை தாக்கி அழித்தது.

புதிய உற்பத்தி ஆலை

இந்தியா, ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமையகம் டெல்லி யில் செயல்படுகிறது. இதன் உற்பத்தி ஆலை ஹைதராபாத்தில் உள்ளது. உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.

புதிதாக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ்உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. வரும் 2024-ம் ஆண்டில் புதிய ஆலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுதோறும் 100 பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க முடியும்.

எடை குறைப்பு

பிரம்மோஸின் அடுத்த தலைமுறை ஏவுகணையான பிரம்மோஸ் என்.ஜி.தயாரிப்பில் தற்போது தீவிர ஆராய்ச்சி நடக்கிறது. இதில் குறிப்பாக ஏவுகணையின் எடை பாதியாக குறைக்கப்படுகிறது. தற்போது நிலம், போர்க்கப்பலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸின் எடை 3,000 கிலோவாகவும் போர் விமானத்தில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸின் எடை 2,500 கிலோவாகவும் உள்ளது.

புதிதாக தயாரிக்கப்படும் பிரம்மோஸ் என்.ஜி. ஏவுகணையின் எடை 1,330 கிலோவாக இருக்கும். இதன்மூலம் போர் விமானங்களில் இருந்து மிக எளிதாக ஏவ முடியும். அடுத்த ஆண்டு இறுதி அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பிரம்மோஸ் என்.ஜி. ஏவுகணையின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் 2 (K) என்று பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நினைவுகூரும் வகையில் ஏவுகணையுடன் “K” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஏவுகணை மணிக்கு 9,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 1,000 கி.மீ. முதல் 1,500 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கி அழிக்கும். 500 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லும். வரும் 2024-ம் ஆண்டில் முதல் சோதனைநடத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் பிரம்மோஸ் ஹைப்பர்சானிக் ஏவுகணை உற்பத்திதொடங்கப்பட உள்ளது. பிரம்மோஸ்ஏவுகணைகளை செயற்கைக்கோள்கள் மூலம் ஏவும் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை வாங்கபிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் ஏற்கெனவே ரூ.3,103 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்தநாட்டுக்கு அடுத்த ஆண்டு ஏவுகணைகள் அனுப்பப்படும் என்று பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடனும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை வாங்கவும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்புக்காகவே ஆயுதங்களை இந்தியா வழங்குகிறது

இந்தியா ஒருபுறம் பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள், ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமின்றி விற்பனையிலும் இறங்கியிருப்பதால், போருக்கு வழிவகுக்குகிறது என்று மற்ற நாடுகள் நினைக்க முடியாது. ஏனெனில், ஆயுதங்களை வாங்கும் வெளிநாடுகள், அந்தந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளவே இந்தியா வழங்குகிறது என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதற்கு உதாரணமாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், இந்திய பயணத்தின் போது பேசுகையில், ‘‘ஐ.நா. சார்பில் சர்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்தும் ராணுவப் படைக்கு (பல நாடுகள் சேர்ந்த அமைதிப் படை) ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தியா அனுப்பி வருகிறது. அவர்களில் ஏராளமானோர் பல நாடுகளில் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். உலக அமைதிக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கை அளப்பரியது’’ என்று மனம் திறந்து பாராட்டியிருப்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு பரவாயில்லை; இந்தியா போன்ற வளரும் நாடுகள் ராணுவத்துக்கு ஏராளமாக நிதி ஒதுக்குவது வளர்ச்சியை பாதிக்கும் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், ராணுவத்துக்கு நிதி ஒதுக்கி அதிநவீன ஆயுதங்கள் தயாரிப்பது மட்டுமன்றி, மற்ற சிறிய நாடுகளின் பாதுகாப்புக்கும் அவற்றை வழங்குவதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்பதை இந்தியா நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.