புதுடெல்லி: நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கும் `ரோஜ்கார் மேளா’வை (வேலைவாய்ப்புத் திருவிழா) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக, 75 ஆயிரம் பேருக்கு நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவளம் தொடர்பாக பிரதமர் மோடிகடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டார். அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் `ரோஜ்கார் மேளா’வை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
நாட்டின் பல்வேறு நகரங்களில், ஒரே நேரத்தில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்கட்டமாக 75,226 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மத்திய அமைச்சர்கள் 50 பேர், சுமார் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினர். மற்றவர்களுக்கு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), எஸ்எஸ்சி மற்றும் ரயில்வே பணியாளர் வாரியம் (ஆர்ஆர்பி) உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்ததைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு சார்பில் 75 ஆயிரம் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5 இடங்கள் முன்னேறி உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சிக்கான தடைகள் அகற்றப்பட்டதே இதற்குக் காரணம்.
பணவீக்கம், வேலையின்மை, 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட நெருக்கடியின் (கரோனா வைரஸ் பரவல்) விளைவுகளால் உலகின் பல பெரிய பொருளாதார நாடுகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் பிரச்சினையை 100 நாட்களில் சரிசெய்துவிட முடியாது.
உலகம் முழுவதும் கடும் நெருக்கடி ஏற்பட்டபோதிலும், இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு சுயசார்பு மிகவும் அவசியம். கடந்த 2014-ல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்திய நிறுவனங்கள் சுயசார்பு அடைந்துவருகின்றன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வழங்கியது. இதனால் 1.5 கோடி பேரின்வேலை பறிபோகாமல் தடுக்கப்பட்டது. வேளாண்மை, எம்எஸ்எம்இமற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை வலிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். கடந்த சில ஆண்டுகளில், சுய உதவிக் குழுக்களில் 8 கோடி பேர் இணைந்துள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.
அமைச்சர்கள் பங்கேற்பு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவிலிருந்தும், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா குஜராத்திலிருந்தும், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் சண்டிகரிலிருந்தும், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மகாராஷ்டிராவிலிருந்தும், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தானிலிருந்தும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையிலிருந்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் அல்லது துறைகளில் காலியாக உள்ள, ஏ மற்றும்பி (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள்), பி (அரசிதழ் பதிவு பெறாதஅதிகாரிகள்), சி ஆகிய பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
மத்திய ஆயுதப் படை பணியாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், எல்.டி.சி., ஸ்டெனோ,பி.ஏ., வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் எம்.டி.எஸ். உள்ளிட்டபதவிகளுக்கு யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்டவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.